animal husbandry
கால்நடைகள் :: முயல் வளர்ப்பு :: கொட்டகை அமைப்பு முதல் பக்கம்

வீட்டமைப்பு மற்றும் இடவசதி

சரியான வெளிச்சத்துடன் காற்றும், நல்ல இடவசதியும் கொண்ட கொட்டகை / வீட்டமைப்பு முறை முயல் வளர்ப்பிற்கு மிகவும் அவசியம் சரியான கூண்டுகள் அல்லது மரத்தால் அமைக்கப்பட்ட பெட்டியமைப்புகளில் குடிநீர், தீவன வசதிகள் முறையாக வழங்கப்பட்டிருக்கவேண்டும். முயல்கள் ஓடிவிடாமல் இருக்க சுற்றுப்புற  அமைப்பு கொண்ட வீட்டமைப்பு அவசியம். வளர்க்கும் இடம், தட்பவெப்பநிலை, பொருளாதார வசதியைப் பொறுத்து பல முறைகள் முயல் வளர்ப்பில் பின்பற்றப்படுகின்றன. மூங்கில்கள், பழைய பெட்டிகள், மரத்துண்டுகள், செங்கற்கள், ஏஸ்பெஸ்டாஸ் சீட்டுக்கள் மற்றும் கட்ச் தரைகள், சுவர்கள் போன்றவை பொதுவாக உபயோகிக்கும் பொருட்கள்.

முயல் வளர்ப்பிற்கு உகந்த தட்பவெப்பநிலைகள்

ஒளி (வெளிச்சம்)


முயல்களின்  இனப்பெருக்கத்தில் ஒளியானது முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை அல்லது செயற்கை ஒளி முயல்களுக்குக் கட்டாயம் வழங்கப்படவேண்டும். ஒரு ஆண் முயல் (இனக்கலப்பிற்குப் பயன்படுத்தப்படுவது) 8-12 மணி நேரம் ஒளி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அதன் உயிரணுக்கள் நல்ல ஓட்டத்துடன் இருக்கும். அதே போல் சினைத் தருணத்தில் இருக்கும் பெண் முயலானது குறைந்தது 6 மணி நேரத்திற்காவது வெளிச்சத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதன் இனப்பெருக்கத்திறன் நன்கு இருக்க இவ்வொளி மிகவும் அவசியம். இயற்கை வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களில் செயற்கை பல்புகளைப் பொருத்துதல் நலம்.பொதுவாக 100 வாட்ஸ் குமிழி விளக்கு (பல்பு) அல்லது 40 வாட்ஸ் ஒளிரும் குழாய் விளக்குகளைப் பயன்படுத்தலாம். இப்பல்புகளை 3 மீட்டர் இடைவெளி விட்டு தரையிலிருந்து 2 மீட்டர் தொலைவில் இருக்குமாறு 16 மணி நேரம் எரியுமாறு அமைத்தல் வேண்டும். இந்தப் பல்புகளை அடிக்கடி அனைத்துப் பின் போடக்கூடாது. காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை எரியுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அடிக்கடி விளக்கை அணைத்துப் போடுவதால் அவை பயந்து, ஒன்றன் மேல் ஒன்று தாவிக் காயங்களை அனைத்துப் போடுவதால் முயல்கள் பயந்து, ஒன்றன் மேல் ஒன்று தாவிக் காயங்களை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. இளம் முயல்களுக்கு ஓரிரு மணி நேர வெளிச்சம் போதுமானது.

வெப்பநிலை


5 டிகிரி செல்சியஸ்  இருந்து 33 டிகிரி செ வரை முயல்கள் வெப்பத்தைத் தாங்கக்கூடியவை. எனினும் முயலுக்கு உகந்த வெப்பநிலை அளவு 10 டிகிரி செல்சியஸ் - 26 டிகிரி செல்சியஸ். நமது இந்தியத் தட்பவெப்பநிலைக்கு முயல்கள் மிகவும் ஏற்றவை. சூடான காற்றை விட முயல்கள் குளிர்காற்றையே விரும்பும். எனினும் உயரமான மலைப்பகுதிகளில் இவைகள் வளர்வது இல்லை. கோடைகாலங்களில் சிறிது வெப்ப அழுத்தம் ஏற்படலாம். சரியான குளிர்ச்சியும், காற்றும் அளிப்பதால் இவ்வழுத்தத்தைத் தணிக்கலாம். வறட்சி ஏற்பட்டு அதனால் முயல்கள் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். வயதான முயல்கள் தன் உடலை நீட்சிப்பதன் மூலம் வெப்பத்தை தாங்கிக் கொள்ளலாம்.இளம் முயல்களைத் தகுந்த முறையில் பாதுகாக்கவில்லையெனில் அவை வெப்பத்தைத் தாங்க இயலாமல் பாதிக்கப்படலாம்.

ஈரப்பதம்


முயல்கள் அதிக ஈரப்பதத்தையும் தாங்கக்கூடியவை, எனினும் ஈரப்பதம் 50 சதவிகிதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் முயல்களில் நோய்த் தாக்கம் ஏற்படுத்தலாம். எனவே மழைக்காலங்களில் ஈரப்பதத்தைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு நீர்க்கசிவும் உள்ளே ஏற்படாதவாறு தண்ணீர்க்குடுவைகளை வெளியிலேயே வைப்பது நல்லது.

காற்றோட்டம்


சுத்தமான புகையற்ற காற்று முயல்களுக்கு மிக அவசியம். முயல் பண்ணையில் தூயகாற்று தங்கு தடையின்றி உலவுமாறு அமைந்திருத்தல் வேண்டும். கோடைக்காலங்களில் காற்று குளிர்ந்ததாக இருத்தல் வேண்டும். வறண்ட காற்று முயல்களின் சுவாசத்திற்கு ஏற்றதல்ல. எனவே ஆங்காங்கு மரங்களை நட்டு வளர்த்தல் நன்மை பயக்கும்.

சப்தம்


முயல்களில் ஒலியின் பாதிப்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனினும் முயல்கள் அதிக சப்தத்தை விரும்புவதில்லை. குறிப்பாக குட்டிகள் பாலூட்டும் போதும், இனச்சேர்க்கையின் போதும் சிறு சப்தம் கூட பாதிப்பு ஏற்படுத்தலாம்.
(ஆதாரம்:நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் - முயல் வளர்ப்பு)

முயல் வளர்ப்பில் பின்பற்றப்படும் முறைகள்

கூண்டு முறை


கூண்டின் உயரம் 50 செ.மீ ஆகவும், அகலம் 70 செ.மீ நீளம் 90 செ.மீ ஆகவும் இருத்தல் வேண்டும். இது பெண் முயல்களுக்கான கூண்டின் அளவு. ஆண் முயல்களுக்கு இவை முறையே 45 செ.மீ, 60 செ.மீ, 60 செ.மீ. கூண்டு செய்யும் கம்பி அளவு அடிப்பாகத்தில் 1 செ.மீ x 1 செ.மீ பக்கங்களில் 2.5 செ.மீ x 2.5 செ.மீ அளவும் இருக்கவேண்டும். கூண்டின் அடிப்பாகம் தரைமட்டத்தில் இருந்து 75-90 செ.மீ உயரத்தில் இருக்குமாறும், எலி, பாம்பு தொல்லைகள் இல்லாதவாறும் கூண்டுகளை வைக்கவேண்டும். கூண்டுகள் நல்ல குளிர்ந்த நிழற்பாங்கான இடத்தில் அமைக்கப்படவேண்டும்.

Rabbit_cages

கொட்டில் முறை

தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட முயல் குட்டிகளை 1.2 மீட்டர் அகலம், 1.5 மீ நீளம், 0.5 மீ உயரம் கொண்ட கொட்டிலில் அடைக்கலாம். ஒரு கொட்டிலில் 20 குட்டிகள் வரை அடைக்கலாம். பருவமடைந்த ஆண், பெண் குட்டிகளை ஒரு கொட்டிலில் அடைத்தால் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் காயங்கள் ஏற்படுத்திக் கொள்ளும். எனவே ஒவ்வொன்றையும் தனியே அடைத்தல் சிறந்தது.

குடிசை முறை

நிழலான இடத்தில் குடிசைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தரை கான்கிரீட் சிமெண்ட் தளமாக இருத்தல் நலம். குடிசையைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் சிறிது உயரத்துடன் பாம்பு, எலி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பானதாக இருத்தல் வேண்டும். மேற்கூரை, மரக்கட்டை, ஆஸ்பெஸ்டாஸ் அல்லது இரும்புக் கம்பிகள் கொண்டதாக இருக்கலாம்.

பறவைக்கூடு முறை

இம்முறையில் பல அளவுகளில் கூடுகள் இருந்தாலும் 50 செ.மீ நீளமும், 30 செ.மீ அகலமும், 15 செ.மீ உயரமும் கொண்ட அளவு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இது மரத்தால் செய்யப்பட்டாலும் காற்றும், வெளிச்சமும் புக வசதியாக இருக்கவேண்டும். கழிவுகள் வெளியேற வசதியாகக் கீழே கம்பி வலை போல் பின்னப்பட்ட அடிப்பாகம் அமைக்கலாம்.

Rabbit_housing

தீவனமும் நீரும்

அலுமினியம் அல்லது கால்வனைசிங் செய்யப்பட்ட இரும்பினால் ஆன தீவனத்தொட்டியைப் பயன்படுத்தலாம். தீவனத் தொட்டியானது கூண்டின் ஓரங்களில் வெளியிலிருந்து கதவைத் திறக்காமலே தீனியை உள்ளே கையைவிட்டுப் போடுமாறு அமைப்பது நன்று. கூண்டுகளில் நீர் வைக்க மண்பானைகள் உபயோகிக்கப்படுகின்றன.தானாக நீர் வெளியாகும் குழாய் அல்லது புட்டியில் நீர் அளிப்பதே சிறந்தது.

(ஆதாரம் : www.vuatkera.org)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15